தமிழகத்தில் ஆன்மீகம் பேசினால் கைது செய்யப்பட வேண்டும் என்பது திமுக அரசின் தவறான செயலாக இருந்து கொண்டிருக்கிறது என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியவர்,
தமிழகத்தில் ஆன்மீகம் பேசினால் கைது செய்யப்பட வேண்டும் என்பது திமுக அரசின் தவறான செயலாக இருந்துக்கொண்டிருக்கிறது. அவர் என்ன பேசினார் என்பது குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு நபர் பேசினார் என்பதற்காக கைது செய்யப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் கிராமம் கிராமமாக சிலையை வைத்து வழிப்பட்டு வருகின்றனர். தமிழகம் என்பது ஆன்மீக பூமி என்றார்.
தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசிய எல் முருகன், முதல்வர் ஏற்கனவே ஸ்பெயின், துபாய் சென்று வந்துள்ளார், அதனுடைய முதலீடு என்ன என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அவர் ஈர்க்கும் அனைத்து நிறுவனங்களும் இந்தியாவில் உள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்த ஒரு முதலீடும் வரப்போவதில்லை என தெரிவித்தார்.