குழந்தை பாலியல் கடத்தலுக்காக அமெரிக்காவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 74 வயது கிறிஸ்தவ பாதிரியார் அப்பல்லோ குய்போலோய், தெற்கு பிலிப்பைன்ஸில் பெரும் போராட்டத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறார். திரைப்படங்களை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் பின்னணி குறித்த செய்தி தொகுப்பு.
தெற்கு பிலிப்பைன்ஸில் பிறந்த அப்பல்லோ கேரியன் குய்போலோய் தன்னை கடவுளின் நியமனம் செய்யப்பட்ட மகன் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். ஜோஸ் குய்போலோய் மற்றும் மரியா கேரியன் ஆகிய பெற்றோருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் இளையவராக இருந்த அப்பல்லோ குய்போலோய் 1972ம் ஆண்டில் “பைபிள் கல்லூரியில்” பட்டம் பெற்ற பிறகு, கிறிஸ்துவ மதப் போதகரானார்.
1974ம் ஆண்டில், அப்பல்லோ குய்போலோய் கிறிஸ்துவின் தேவதைகள் பலிபீடத்திற்கு வந்து, தனது தலையில் எண்ணெயை ஊற்றி, தலை முதல் கால் வரை அபிஷேகம் செய்தனர் என்று அறிவித்தார்.
1985ம் ஆண்டில், தனது பழைய தேவாலயத்தை விட்டு வெளியேறிய அப்பல்லோ குய்போலோய், Kingdom of Jesus Christ என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கினார்.
அதிவேகமாக வளர்ந்த இந்த அமைப்பு, சீக்கிரமே பிலிப்பைன்ஸ் உட்பட 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரபலமானது. கிட்டத்தட்ட ஏழு மில்லியன் ஆதரவாளர்களைக் கொண்டிருக்கும் அப்பல்லோ குய்போலோய்வின் Kingdom of Jesus Christ பிலிப்பைன்ஸில் ஒரு மேலாதிக்க சக்தியாக உருவெடுத்தது.
குறிப்பாக டாவோ நகரில், குய்போலோய் “புதிய ஜெருசலேம்” என்று அழைக்கப்படும் பரந்த 75 ஏக்கர் வளாகத்தை உருவாக்கினார்
பிலிப்பைன்ஸின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவின் “ஆன்மீக ஆலோசகர்” என்று அறியப்பட்ட குய்போலோய், ஒருகட்டத்தில் பிலிப்பைன்ஸ் அரசியலையே தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். தேர்தல் வெற்றிக்கு குய்போலோய் ஆதரவை அனைத்து அரசியல் வாதிகளும் எதிர்பார்க்கும் நிலை உருவானது.
2018ம் ஆண்டில், குய்போலோயின் தேவாலயம் மற்றும் அமெரிக்காவில் அவரின் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த விசாரணைகள் தொடங்கின.
பிலிப்பைன்ஸில் இருந்து அமெரிக்காவுக்கு சிறுமிகள் மற்றும் இளம் பெண்களைக் கடத்தியதாகவும் அப்படி கடத்திவரப்பட்ட சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை நிதி திரட்டுவதற்கும், பாலியல் அடிமைத்தனத்துக்கும் குய்போலோய் கட்டாயப்படுத்தினார் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
தேவாலய நடவடிக்கைகளுக்கு என்று பெறப்பட்ட நன்கொடைகள் குய்போலோய் வின் ஆடம்பரமான வாழ்க்கை முறைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டது.
Kingdom of Jesus Christ அமைப்பின் உறுப்பினர்கள் போலி திருமணங்களில் ஈடுபடுவதற்கும் மோசடியான மாணவர் விசா பெறுவதற்கும் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறும் அமெரிக்காவின் FBI,
தனிப்பட்ட உதவியாளர்களாக பணிபுரிய 12 -முதல் 25 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை பணியமர்த்தியதாகவும், கொடுமைப்படுத்தியதாகவும், பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியதாகவும் குய்போலோய் மீது FBI குற்றஞ்சாட்டியுள்ளது.
தன்னை எதிர்ப்பவர்களைப் பாவம் செய்து விட்டதாக கூறி, தாவோ நகரின் புறநகரில் உள்ள பிரார்த்தனை மலைக்கு அனுப்பி வைத்தாகவும், அங்கு தலையை மொட்டையடித்தும் உடல்ரீதியாக துன்புறுத்தியும் பல்வேறு கொடுமையான தண்டனைகள் கொடுத்ததாகவும் குய்போலோய் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
பாலியல் வன்முறை, குழந்தை கடத்தல், பெண்கள் கடத்தல், மோசடி உள்ளிட்ட பல்வேறு சதிகளை செய்த குற்றஞ்சாட்டுக்களின் அடிப்படையில் குய்போலோய்க்கு எதிராக அமெரிக்க பெடரல் நீதித்துறையால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
2021ம் ஆண்டில் FBI-ன் MOST WANTED CRIMINALS பட்டியலில் இடம்பிடித்த போதிலும், குய்போலோய் கைது செய்யப்படாமலே இருந்து வந்தார்.
2022ம் ஆண்டு, முன்னாள் அதிபர் டுடெர்டே பதவியில் இருந்து வெளியேறிய போதே, குய்போலோயின் அதிர்ஷ்டம் மங்கத் தொடங்கியது.
கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பிலிப்பைன்ஸ் காவல் துறையினர் இராணுவத்துடன் ஒருங்கிணைந்து, Kingdom of Jesus Christ தலைமையகத்தில் ஒரு பெரிய சோதனையைத் தொடங்கினர்.
குய்போலோய் பதுங்கு குழியில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், Kingdom of Jesus Christ -க்கு சொந்தமான 74 ஏக்கர் வளாகத்தை இரண்டு வாரங்களுக்கும் மேலாக தேடுவதற்கு 2,000 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பயன்படுத்தப் பட்டனர்.
75,000 இருக்கைகள் கொண்ட கதீட்ரல் கல்லூரி மற்றும் அரங்கம் ஆகியவற்றின் மீது போலீசார் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி தேடுதல் வேட்டை நடத்தினர்.
குய்போலோய் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, தெர்மல் இமேஜிங் மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூமியில் ஆழமான மனித உடலின் வெப்பம் மற்றும் இதயத் துடிப்பை காவல் துறையினர் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பல நாட்கள் தேடலுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை குய்போலோய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தகவலைப் பிலிப்பைன்ஸ் உள்துறை செயலாளர் பெஞ்சமின் அபாலோஸ் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
அப்பல்லோ குய்போலோய் மீது பிலிப்பைன்ஸ் நீதிமன்றத்தில் மனித கடத்தல் குற்றச்சாட்டும்,பாலியல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
அப்பல்லோ குய்போலோய்யை கைது செய்ய அமெரிக்கா முயன்றபோது, டுடெர்டே தான் ஆட்சியில் இருந்தார். ஆனால் இப்போது மார்கோஸின் ஆட்சியில் தான் அப்பல்லோ குய்போலோய் இறுதியாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.