சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனின் 67வது நினைவு தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை நினைவு கூர்ந்தனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
வெள்ளையனே வெளியேறு போராட்டம், இராணுவப் பணி என சுதந்திர போரின் மிக முக்கிய இயக்கங்களில் பங்கு வகித்து, நாட்டின் சுதந்திரத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர் இமானுவேல் சேகரன் என தெரிவித்துள்ளார்.
மேலும், தேசத்தின் விடுதலைக்காகவும், விளிம்புநிலை சமுதாய மக்களின் உரிமைக்காகவும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரனை அவரது நினைவு தினத்தில் போற்றி வணங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அதில், ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறவும், சமத்துவ சமூகம் உருவாகவும் போராடிய இமானுவேல் சேகரனின் நினைவை போற்றி வணங்குவதாக தெரிவித்துள்ளார்.
அனைவரும் சமம் என்ற உயரிய லட்சியத்தைக் கொண்டு, ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவதை உறுதிமொழியாக ஏற்று செயல்படுவோம் எனவும் பதிவிட்டுள்ளார்.
இதேபோன்று, இமானுவேல் சேகரனாரின் நினைவுதினத்தையொட்டி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், தீண்டாமையை ஒழிக்கவும், சமூகங்களுக்குள் இணக்கம் உருவாகவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர் இமானுவேல் சேகரன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவரது நினைவுதினத்தையொட்டி சேலத்தில் அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.