பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மாநகராட்சி பள்ளிகளில் தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் முயற்சியை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
தற்காப்புக் கலைகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரமாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில், பள்ளிக் குழந்தைகளின் மத்தியில் தற்காப்புக் கலைகளின் முக்கியத்துவத்தை செயல்படுத்தி காட்டியிருக்கிறது சென்னை மாநகராட்சி.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் 6 மாத கால சிறப்பு வகுப்பு சென்னை பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கராத்தே, டேக்வாண்டோ ஆகிய தற்காப்பு கலைகளை பெண் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் நோக்கில், முதற்கட்டமாக 6 பள்ளிகளில் 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் சென்னை மாநகராட்சியின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த பயிற்சி வகுப்பின் மூலம், கராத்தேவின் மூலம் தடைகளை தகர்த்தெறிவது, எதிரிகளை தாக்குவது, எதிர்வரும் தாக்குதலை சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவிகளுக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
மனதில் பெரும் தடையாக இருக்கும், பயம், கோபம், சோம்பேறித்தனம், தலைக்கனம், சோகம் மற்றும் சந்தேக குணம் ஆகியவைகளை தகர்த்தெறியும் பொருட்டு, ஒவ்வொன்றையும் மையப்படுத்தி ஓடுகளை கைகளாலும், கால்களாலும் உடைத்து மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
செல்லும் இடமெல்லாம் பெண்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டி எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், செயலை மையமாக கொண்டு கற்பிக்கப்பட்டு வரும் இந்த தற்காப்பு கலைகள் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தேவையான ஆயுதம் என்கின்றனர் பயிற்சியாளர்கள்
இனி விளம்பரங்களில் ஏற்படுத்தும் விழிப்புணர்வுகளை தாண்டி, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்ள இதுபோன்ற வாய்ப்புகளை தொடர்ந்து ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.