1984-ல் கடத்தப்பட்ட விமானத்தில் தனது தந்தை பயணித்ததை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நினைவுகூர்ந்தார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட அவரிடம், நெட்பிளிக்ஸில் வெளியான ‘IC 814 தி கந்தஹார் ஹைஜாக்’ தொடர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அந்த தொடரை தான் இதுவரை பார்க்கவில்லை எனவும், இதேபோல ஒரு சம்பவம் தன் வாழ்வில் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
1984-ல் விமானம் ஒன்று கடத்தப்பட்டபோது கடத்தல் விவகாரத்தை கையாளும் மத்திய அரசின் குழுவில் தான் இருந்ததாகவும், கடத்தப்பட்ட விமானத்தில் தனது தந்தை பயணித்ததாகவும் தெரிவித்தார்.
1984ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற விமானம் நடுவானில் கடத்தப்பட்டு துபாய்க்கு கொண்டு செல்லப்பட்டது. ஜெய்சங்கரின் தந்தை உள்ளிட்ட அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டதன் மூலம் நெருக்கடி அமைதியான முறையில் முடிவுக்கு வந்தது.