அன்னபூர்ணா விவகாரத்தில் உணவக உரிமையாளர் விரும்பியே தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரினார் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மையக் குழுவின் கூட்டம் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
பின்னர் ஹெ.ராஜா செய்தியாளர்களிடம்தெரிவித்ததாவது :
மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை பணிகளை துரிதப்படுத்துவதற்கான அடையாளமாக மத்திய மைச்சர் நிதின் கட்கரி வருகை தந்து அந்த பணிகளை ஆய்வு செய்தார்.
தமிழக அரசு தாமதமில்லாமல் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தால் நெடுஞ்சாலை பணிகள் துரிதமாக நடைபெறும். மத்திய மாநில அரசு இணைந்து செயல்பட்டால் தான் எந்த திட்டங்களாக இருந்தாலும் விரைந்து செயல்படுத்த முடியும்.
மத்திய அரசு வழங்கும் நிதியை செயல்படுத்தும் இடத்தில் மாநில அரசு தான் உள்ளது. மத்திய அரசின் விஷ்வகர்மா நிதி உதவி திட்டத்தை இதுவரை மாநில அரசு வெளியிடவில்லை. வரும் 17 ஆம் தேதி விஷ்வர்மா தினம். அந்த தினத்திற்குள் மாநில அரசு அரசிதழில் வெளியிட்டால் தொழில் செய்யும் அமைப்பான விஷ்வகர்மாவை சேர்ந்தவர்களுக்கு பயனாக இருக்கும்.
36 விதமான வரிகளை ஒன்றுபடுத்தி சரக்கு மற்றும் சேவை வரியாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை. வெண்ணைக்கு வரி ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே இருந்தது.
ஜிஎஸ்டி விவகாரத்தில் சில கோரிக்கைகள் இருக்கலாம். அந்த கோரிக்கைகளை பரிசீலினை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது.
கோவை அன்னபூர்ணா உணவக அதிபர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் அந்த உணவக அதிபரே நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க விரும்பியதால் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரே விரும்பி தான் மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டது தொடர்பாக பாஜகவிற்கும் நிர்மலா சீதாராமன் தரப்பிற்கும் எந்த பங்கும் இல்லை.
இந்தியாவிற்கு விரோதமாக வெளிநாட்டில் பேசிய ராகுல் காந்தி “ஆண்டி இந்தியன்”. அவர் அமெரிக்கா சென்று இந்தியாவிற்கு எதிரான நபர்களுடன் கலந்துரையாடினார்.
அப்படிப்பட்ட ராகுல் காந்தி குறித்து நாம் பேச வேண்டாம் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.