சென்னை அசோக் நகர் பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்க நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்ததாக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகாவிஷ்ணு சொற்பொழிவு ஆற்றிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட மகாவிஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாபேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனடிப்படையில், போலீசார் விசாரணை நடத்தியபோது, மகாவிஷ்ணு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், அசோக் நகர் பள்ளியில் சொற்பொழிவு ஆற்ற பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரான காமாட்சி என்பவர் அழைத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும், சொற்பொழிவு ஆற்ற பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் சங்க நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 3 நாள் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைவதால், மாலை 6 மணிக்குள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்படுத்தப்படவுள்ளார்.