தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டதால், தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த நிலையில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 35 பேர் தேர்வு எழுதினர். வினாத்தாளில் பொது அறிவு பகுதியில் வினா எண் 90-இல் ஆளுநர் குறித்து சர்ச்சையான கேள்வி கேட்கப்பட்டதால், தேர்வர்கள் குழப்பமடைந்தனர்.
அதில் கூட்டாட்சி நடைமுறையில் ஆளுநர் பதவியில் இருப்பவர், அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இரு விதமான பணிகளை செய்கிறார் எனவும், அதற்கு காரணம், ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் இருவிதமான முரண்பட்ட வாக்கியம் அளிக்கப்பட்டிருந்தது.
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 153 மற்றும் 154-இன்படி, அரசின் நிர்வாகத் தலைவராக ஆளுநரே திகழும் நிலையில், அவரது பொறுப்பு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என வினாத்தாளில் வாக்கியம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.