காலனித்துவ அடிமை சின்னங்களில் இருந்து தேசத்தை விடுவிக்கும் நடவடிக்கையாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் இனி ஸ்ரீவிஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவ விரிவாக்கத்தில் அந்தமான் தலைநகருக்கு போர்ட் பிளேர் என்ற பெயர் எப்படி வந்தது என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கண்கவரும் இயற்கை அழகு கொஞ்சும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், உலகின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், புவியியல் ரீதியாக இந்திய நிலப்பரப்பின் கிழக்கில் அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவில், மியான்மரில் இருந்து இந்தோனேஷியா வரை நீண்டுகொண்டிருக்கும் மலைத்தொடர்களுடன் இத்தீவுகள் அமைந்திருக்கின்றன.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான இங்கு மொத்தமாக 836 தீவுகள் இருந்தாலும்,
சுமார் 37 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். 22 சிறிய நிக்கோபார் தீவுகளில் 10 தீவுகளில் மட்டும் மக்கள் வசிக்கின்றனர்.
18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் ஆர்க்கிபால்ட் பிளேர், பிரிட்டிஷ் காலனித்துவ விரிவாக்க முயற்சிகளுக்குப் பங்காற்றினார்.
குறிப்பாக, அந்தமான் தீவுகளை ஆய்வு செய்த பிளேர், அந்த தீவுகளைப் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் மையமாக மாற்றலாம் என்று பரிந்துரை செய்திருந்தார். அதுவே, அடுத்தடுத்த காலனித்துவ வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைந்திருந்தது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ராணுவ, நிர்வாக மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான துறைமுகம் அமைத்து, ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர்.
இந்திய விடுதலை போராட்ட வீரர்களை அடைத்து வைக்க தனியாக செல்லுலார் சிறையும் இந்த தீவில் அமைக்கபட்டது.
பிளேர் முதன் முதலில் வந்திறங்கிய மீனவக் குக்கிராமத்தை, அந்தமானின் தலைநகராக மாற்றிய ஆங்கிலேயர்கள், அவரது நினைவாக , போர்ட் பிளேர் என்று பெயரிட்டார்கள்.
விடுலைக்குப் பின் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இருப்பதால், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.
நாட்டின் மீதுள்ள காலனித்துவ அடிமை சின்னங்களை மாற்ற வேண்டும் என்ற இந்திய பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் இருந்து, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரின்(Port Blair) பெயர் ஶ்ரீ விஜய புரம்(Sri Vijaya Puram) என மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், சுதந்திரப் போராட்டம் மற்றும் வரலாற்றில் இணையில்லாத இடத்தை பெற்றுள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக செயல்பட்டதாகவும்,இப்போதும் இந்த தீவுப் பகுதி, இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியத் தளமாக விளங்குவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
இத்தீவு தான், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மூவர்ணக் கொடியை முதன்முதலில் வெளிப்படுத்திய இடமாகவும், வீரசாவர்க்கர் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடிய செல்லுலார் சிறையுமாகும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ விஜயபுரம் என்ற பெயர், இந்தியா சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அதில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கடற்படை அதிகாரியின் நினைவாக ஒரு மீனவக் கிராமத்திற்கு போர்ட் பிளேயர் என்று பெயர் சூட்டப்பட்டது என்பது வரலாறு.
ஆனால் ஸ்ரீ விஜய புரம் என்று பெயர் மாற்றம் செய்திருப்பது, புதிய சுதந்திர இந்தியாவை உருவாக்குவதில் நகரத்தின் பங்களிப்புக்கு ஏற்ற பொருத்தமான மரியாதையாகும்.