அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யும் முயற்சியாக மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராகவும், அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் நடந்த பேரணியில் பங்கேற்றபோது, டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில், துப்பாக்கி சூடு நடத்திய நபர் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்நிலையில், புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட சென்றபோது ட்ரம்ப்பை நோக்கி சில துப்பாக்கியால் சுட முயற்சித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார். தாம் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ட்ரம்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவில் வன்முறைகளுக்கு இடமில்லை என தெரிவித்துள்ள அவர், முன்னாள் அதிபரின் பாதுகாப்பு நடவடிக்கை உறுதிப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்