ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் 24 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 11 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன், முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்தன. இந்நிலையில் இன்று அனந்த்நாக், சோபியான், தோடா, ராம்பன் உட்பட 7 மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5 லட்சத்து 66 ஆயிரம் இளைஞர்கள் உட்பட சுமார் 23 லட்சத்து 27 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
முதல்கட்ட தேர்தலில், புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர் 35 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஜம்முவில் 19, உதம்பூரில் 1, டெல்லியில் 4 என மொத்தம் 24 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று காலை 9 மணி நிலவரப்படி 11 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.