புதுச்சேரியில் முழு அடைப்பு எதிரொலி காரணமாக கடலூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு அத்தியாவசிய பணிகளுக்காக நாள்தோறும் புதுச்சேரிக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டி கூட்டணி சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கடலூரில் இருந்து சென்னை செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும் திண்டிவனம் வழியாக மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இதேபோன்று, புதுச்சேரி, மரக்காணம், கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயங்கும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால், கடலூர் பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.
இது தவிர ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், குமாரமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து கடலூருக்கு வரும் தொழிலாளர்களும் பேருந்துகள் இயக்கப்படாததால் பாதிக்கப்பட்டுள்ளனர்.