வேளாண் துறையில் உர மானியத்திற்கு 24 ஆயிரத்து 475 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார்.
அதன்படி, வேளாண் துறையில் உர மானியத்திற்கு 24 ஆயிரத்து 475 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
விவசாயிகள் நலனுக்காக 35 ஆயிரம் கோடியில் திட்டங்களை செயல்படுத்தவும் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக கூறினார். மேலும், 2 ஆயிரத்து 104 கோடியில் சந்திரயான்-4 திட்டத்தை 36 மாதங்களில் செயல்படுத்தவும், ஆயிரத்து 236 கோடியில் வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய வீனஸ் ஆர்பிட்டர் திட்டத்தை தொடங்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 79 ஆயிரத்து 156 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள மத்திய அரசு, 5 கோடி பழங்குடியின மக்களுக்கு வீடு, சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவற்றை ஏற்படுத்தி தரவும் நிதி ஒதுக்கியுள்ளதாகக் கூறினார்.
மேலும், ஐஐடி, ஐஐஎம்-க்கு இணையாக ஐஐஐசி என்ற கல்வி நிறுவனம் தொடங்கவும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.