இந்தியாவில் பெருமழையைத் தடுக்கவும் அல்லது வறட்சியான இடங்களில் மழையை ஏற்படுத்தவும் கூடிய புதிய தொழில்நுட்பம், இன்னும் 5 ஆண்டுகளில், மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வானிலை கண்காணிப்பு, முன்னறிவிப்பு ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் ‘மிஷன் மௌசம்’ திட்டத்துக்கு இரண்டு ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
“மௌசம்” என்ற சொல்லுக்கு “வானிலை” அல்லது “பருவம்” என்று பொருள். மேலும், அரபுச் சொல்லான மவ்சிம், படகுகள் பாதுகாப்பாகப் பயணிக்கும் பருவத்தைக் குறிக்கும் சொல்லாகும்.
‘மிஷன் மௌசம்’, என்ற திட்டம், இந்தியப் பெருங்கடலை ஒட்டிய 39 நாடுகளுடன் கடல்சார் கலாச்சாரத் தொடர்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாடுகளுக்கிடையேயான தேசிய கலாச்சாரங்களைப் புரிந்துகொள்வதும் மற்றும் நாடுகளுக்கு இடையேயான தகவல்தொடர்புகளை மீண்டும் உருவாக்குவதும் ‘மிஷன் மௌசம்’ திட்டத்தின் நோக்கமாகும்..
வளிமண்டல அறிவியல், வானிலை கண்காணிப்பு, முன்னறிவிப்பு மற்றும் வானிலை மேலாண்மை ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் திறனை மேம்படுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும்.
இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்தும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த திட்டம், மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள், உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கவும், அதிக துல்லியத்துடன் வானிலையைக் கணிக்கும் ஒரு புதிய அளவுகோலை உருவாக்கவும் பயன்படும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய முதல் நடுத்தர அளவிலான வானிலை முன்னறிவிப்பு துல்லியத்தை ஐந்து முதல் 10 சதவீதம் வரை மேம்படுத்துவதையும், அனைத்து முக்கிய மெட்ரோ நகரங்களிலும் காற்றின் தரத்தை 10 சதவீதம் வரை மேம்படுத்துவதையும் மிஷன் மௌசம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
10 முதல் 15 நாட்கள் வரையிலான காலநிலை முன் கணிப்பை மூன்று மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக் மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு நிறுவனத்தில் “கிளவுட் சேம்பர்” நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்ப கழக ஆய்வகத்தில், செயற்கையாக மேகங்களை உருவாக்கி சோதனைகளை மேற்கொள்ளும் நிலையில், எந்த வகையான மேகங்களை விதைக்க முடியும் என்பதையும் விதைப்பதற்கு என்னென்ன பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் மழையை அதிகரிக்க அல்லது தடுக்க எவ்வளவு விதைப்பு தேவைப்படுகிறது என்பதையும் கண்டறிய முடியும் என்றும், மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மழை மற்றும் ஆலங்கட்டி மழையை செயற்கையாக அதிகரிக்க அல்லது அதிக மழை பெய்வதைத் தடுக்க முடியும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்
மிஷன் மௌசம் திட்டத்தின் மூலம், விவசாயம், பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல், விமானப் போக்குவரத்து, நீர்வளம், மின்சாரம், சுற்றுலா, கப்பல் போக்குவரத்து, போக்குவரத்து, எரிசக்தி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்கு நேரடியாகப் பயன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.