அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது மழைநீர் வடிகால், சாலைப் பணிகளுக்கு டெண்டர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 290 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகாலும், 246 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.
இதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி அரசு பொறியாளர்கள் மீது புகார் எழுந்தது.
இதனையடுத்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி.வேலுமணி உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.