ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடவுளை வைத்து அரசியல் செய்வதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது ஆய்வக பரிசோதனையில் உறுதியானது.
இதுதொடர்பாக விளக்கமளித்த ஜெகன்மோகன் ரெட்டி, கடவுள் பெயரை வைத்து சந்திரபாபு நாயுடு அரசியல் செய்வதாக விமர்சித்தார்.
மேலும், லட்டு தயாரிப்பதற்கான ஒப்பந்தம் 6 மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும் என்றும், இதற்கான வரைமுறையில் கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் விளக்கமளித்தார்.
மத விவகாரத்தை வைத்து தெலுங்கு தேசம் கட்சி அரசியல் செய்வதாக குற்றம்சாட்டிய ஜெகன்மோகன் ரெட்டி, தகுதியற்ற பொருட்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் 18 முறை நிராகரித்ததையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், திருப்பதி லட்டின் ஆய்வக பரிசோதனை முடிவு கடந்த ஜூலையில் வெளியானதாக கூறிய அவர், அன்றைய தினம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுதான் முதலமைச்சராக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு தடவப்பட்ட விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா கடிதம் எழுதியுள்ளார்.