பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாச உள்ளிட்ட 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இலங்கை தேர்தலில் 40 லட்சம் தமிழர்கள் உள்பட 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலில் 50 விழுக்காட்டிற்கு அதிகமான வாக்குகளை பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
மொத்தம் 13 ஆயிரத்து 421 மையங்களில் மக்கள் வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவை முன்னிட்டு 67 ஆயிரம் காவலர்கள், ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் இன்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்கி விடும் என்றும், நாளை மதியத்துக்குள் இலங்கையின் புதிய அதிபர் யார் என்று தெரிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை அதிலிருந்து மீளாத நிலையில், தற்போது நடைபெறும் அதிபர் தேர்தலை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.