புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி கோயிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன. கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகைதந்த ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நம்பெருமாளை வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. உற்சவர் எண்ணப்பர், ஸ்ரீதேவி, பூமிதேவி ஆகியோருடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்ததை பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர். அதிகாலை முதலே கோயிலில் திரண்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள பெருமாள் கோயிலில் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்த பக்தர்களுக்கு லட்டு, பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் 60-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.