திருமலை லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கொழுப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக ஆய்வக அறிக்கையில் தெரியவந்துள்ளது. புகழ்பெற்ற திருப்பதி லட்டு சாப்பிடாமல் திருமலை திருப்பதி தரிசனம் முழுமையடையாது என்ற நிலையில் , இந்த ஆய்வறிக்கை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
திருப்பதி என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது லட்டுதான். உலக அளவில் திருப்பதி லட்டு மிகவும் பிரசித்தி பெற்றது.
ஸ்ரீவாரி லட்டு என்று போற்றப்படும், திருப்பதி லட்டு, திருமலை ஸ்ரீவெங்கடேஸ்வரப் வெங்கடேசப் பெருமானுக்கு நைவேத்தியமாக படைக்கப்பட்டுப் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது
கி.பி.1445ஆம் ஆண்டு வரை ’திருப்பொங்கம்’ என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து ‘சுய்யம்’ என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது.
1455ஆம் ஆண்டு முதல் அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள். பிறகு,1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. பிறகு 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் பிரசாதமாக தரப்பட்டது. அடுத்து 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.
1803ஆம் ஆண்டு அன்றைய மதராஸ் மாகாணம் அமல்படுத்திய பிரசாத விநியோக முறையில் பூந்தி பிரசாதமாக வழங்கப்பட்டது.
பிறகு 1940ஆம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை லட்டுதான் பிரசாதமாக திருப்பதியில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோகிதம் லட்டு என்ற 3 வகையான லட்டுகள் திருப்பதியில் 3 தயாரிக்கப்படுகிறது.
இந்த லட்டுகள், லட்டு பொட்டு எனப்படும் சிறப்பு சமையலறையில் தயாரிக்கப்படுகின்றன. கோவிலில் சம்பங்கி பிரதாக்ஷணம் என்னும் இடத்தில் லட்டுகள் தயாரிக்கும் பொட்டு என்னும் மடப்பள்ளி உள்ளது
ஒரு நாளைக்கு சுமார் 10 டன் உளுந்து, 10 டன் சர்க்கரை, 700 கிலோ முந்திரி, 150 கிலோ ஏலக்காய், 300 முதல் 500 லிட்டர் நெய், 500 கிலோ சர்க்கரை மிட்டாய் மற்றும் 540 கிலோ திராட்சை கொண்டு லட்டு தயாரிக்கப் பயன்படுகிறது. லட்டு பொட்டுவில், பொது கார்மிகுலு என்ற பெயரில், சுமார் 620 சமையற்காரர்கள் பணிபுரிகின்றனர்.
திருப்பதி லட்டை கள்ளச் சந்தையில் விற்பதைத் தடுக்கும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடும் பெற்றுள்ளனது.
இந்த திருப்பதி லட்டுக்கு ஆசைப்பட்டால் மட்டும், ஒருவரது கைக்கு வந்து விடாது. பிரசாதம் அவரது கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் லட்டு கைக்கு வந்து சேரும் என்பது இன்றும் பக்தர்களது நம்பிக்கை.
இந்த புனித பிரசாதத்தில் தான், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தரமற்ற பொருட்கள் மற்றும் விலங்குக் கொழுப்பைப் பயன்படுத்தியதாகவும், இப்போது சுத்தமான நெய் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், கோவிலுக்குள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில், கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சரின் இந்த குற்றச்சாட்டை, அரசு வெளியிட்டுள்ள ஆய்வக அறிக்கையும் உறுதிபடுத்தியுள்ளது.
கால்நடை மற்றும் உணவு பகுப்பாய்வு கற்றல் மையத்தின் அறிக்கையில், பிரசாத தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டிறைச்சி, பன்றிக்கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இறைவனுக்கும் இந்து மதத்துக்கும் அவமானம் ஏற்படுத்திய முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, முன்னாள் ஆலய செயல் அதிகாரி தர்மா ரெட்டி, முன்னாள் TTD தலைவர் ஒய்.வி.சுப்பா மற்றும் கருணாகர் ரெட்டி ஆகியோர் பெரும் பாவம் செய்திருப்பதாகவும், அதற்காக எல்லாம் வல்ல இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் என்றும், தெலுங்கு தேச தலைவர் ஆனம் வெங்கட ரமண ரெட்டி கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு இந்துக் குடும்பமும் கோவிந்தரின் முன் தீபம் ஏற்றி மன்னிப்புக்கேட்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஆட்சியில், திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டது குறித்து அரசு, தீவிர விசாரணை நடத்தும் என ஆந்திர மாநில அமைச்சர் நர லோகேஷ் தெரிவித்துள்ளார்.
திருப்பதி பிரசாதத்தில் காணப்படும் மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சி கலந்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள ஆந்திர அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் துணை முதல்வருமான பவன் கல்யாண், திருமலை தேவஸ்தானம் இந்தப் பிரச்சினைகளைத் சரி செய்ய ‘சனாதன தர்ம ரக்ஷனா வாரியம்’ நிறுவப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
உடனடியாக உயர்மட்டக் குழுவை அமைக்க வேண்டும் அல்லது நெய்க்குப் பதிலாக பன்றிக் கொழுப்பு மற்றும் மாட்டிறைச்சி பயன்படுத்தப் பட்டதா ? என்பதை சிபிஐ கொண்டு விசாரிக்க வேண்டும் என ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் லட்டு பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பசு நெய் தரமற்ற நிலையில் இருப்பதையும் அதிக அசுத்தங்கள் கலந்திருப்பதையும், பல ஆண்டுகளுக்கு முன்பே தான் கவனித்ததை ஒப்புக்கொண்டுள்ள திருப்பதி கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகர் ரமண தீக்ஷிதுலு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அறக்கட்டளைத் தலைவரிடம் எடுத்து சொல்லியும் பொருட்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் முழு அறிக்கை கேட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா, இதுகுறித்து மத்திய அரசு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த சூழலில், திருப்பதி பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக ஆந்திர முதல்வர் கூறியதை, பதவியில் இருக்கும் நீதிபதி அல்லது உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு விசாரிக்க வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி கட்சி சார்பில், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப் பட்டது.
அதற்கு, வரும் செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் பொதுநல வழக்காக தாக்கல் செய்ய பரிந்துரைத்த நீதிமன்ற அமர்வு, அன்றைய தினம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தனது அரசில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என்றும், லட்டு சர்ச்சை தேவையற்றது என்றும் தெரிவித்துள்ளார்.