பரபரப்பான அரசியல் சூழலில், டெல்லி புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்றுக் கொண்டார்.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய முதலமைச்சராக அதிஷி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவி பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
தொடர்ந்து செளரவ் பரத்வாஜ், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன் மற்றும் முகேஷ் அஹ்லாவத் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் சுல்தான்பூர் மஜ்ரா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முகேஷ் அஹ்லாவத், அமைச்சரவையில் புதிதாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, அதிஷியின் பெற்றோர் மற்றும் ஆம் ஆத்மி நிர்வாகிகள் பங்கேற்றனர்.