திருப்பதி லட்டு தயாரிப்பில் நிகழ்ந்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட 11 நாட்கள் விரதம் இருப்பதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார்.
திருப்பதி லட்டு பிரசாதம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஆந்திர அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.
இதனிடையே நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான் என்று தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், புனிதமாக கருதப்படும் திருமலை லட்டு பிரசாதம், கடந்த ஆட்சியாளர்களால் தூய்மையற்றதாகி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனால் குண்டூர் மாவட்டம், நம்பூரில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் தீட்சை எடுப்பதாகவும், 11 நாள் விரதத்திற்கு பிறகு பெருமாளை தரிசிக்கவுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.