சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரனை நியமித்து குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த ஜூலை மாதம் பரிந்துரைத்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராமை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள K.R. ஸ்ரீராம் 1963 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர்.
மும்பை பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் சட்டம் பயின்ற கே.ஆர். ஸ்ரீராம் 1986ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 2013 ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், டெல்லி, இமாச்சல், மத்தியபிரதேசம், மேகாலயா, ஜம்முகாஷ்மீர், ஜார்கண்ட், கேரளா உயர்நீதிமன்றங்களுக்கும் தலைமை நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.