இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் இயக்கத்தின் அனுர குமார திசநாயக்க முன்னிலையில் வகித்து வருகிறார்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைகிறது. இதையொட்டி, நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரமதேசா, தேசிய மக்கள் சக்தி கூட்டணி சார்பில் அனுரகுமார திஸாநாயக்கா, முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்ட 38 பேர் போட்டியிட்டனர்.
நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியதால், தேர்தல் முடிவு இன்று வெளியாகும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அனுர குமார திசநாயக்க தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். 2-வது இடத்துக்கு தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே போட்டி உருவாகி உள்ளது.
இலங்கை தேர்தலைப் பொறுத்தமட்டில் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்கு விருப்ப வாக்களிக்கலாம். அதில் 50 சதவீத வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெறுபவராக அறிவிக்கப்படுவார். ஒருவேளை யாரும் 50 சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்றால், முதல் இரு இடங்களைப் பிடித்த வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.