லெபனான் தலைநகரில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 35-ஐ தாண்டியது.
காஸா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவ நிலைகளில் ஹிஸ்புல்லாக்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் ஆயிரக்கணக்கான வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி சக்தி சேமிப்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனா். மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியது. இதில் 37 உயிரிழந்த நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் சிறப்பு அதிரடிப் படையான ‘ரத்வான்’ படை தளபதி இப்ராஹிம் அக்கீல் கொல்லப்பட்டதை அந்த அமைப்பு உறுதி செய்தது. இது தவிர, அதே சிறப்புப் படையைச் சோ்ந்த அகமது வாபியும் இஸ்ரேல் குண்டுவீச்சில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.