சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் ஓட்டுனர் இல்லா முதல் மெட்ரோ ரயிலின் தயாரிப்பை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ஆயிரத்து 215 கோடி மதிப்பில் வழங்கியுள்ளது.
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகளை உற்பத்தி செய்யும் பணியை உற்பத்தியாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம், ஸ்ரீசிட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.
முதல் மெட்ரோ ரயில் பெட்டிக்கான உற்பத்தி தொடங்கிய நிலையில் பெட்டியில் உள்ள பல்வேறு உபகரணங்களை பொருத்தும் பணிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து முதல் மெட்ரோ ரயிலுக்கான அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
அனைத்து நிலையான சோதனைகளும் முடிந்த பின்னர், மெட்ரோ ரயில் பூந்தமல்லி பணிமனைக்கு அனுப்பப்படும் என்றும், அதன் பிறகு, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் வழித்தடத்தில் பல்வேறு நிலையில் சோதனை ஓட்டங்களுக்கு உட்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ ஒப்புதல்களைப் பெற்ற பிறகு பயணிகளின் சேவையை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.