மத்தியப்பிரதேசத்தில் இருப்புப் பாதையில் வெடிபொருள் வைத்து பெரும் சேதம் ஏற்படுத்த முயன்ற ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஜம்மு- காஷ்மீரிலிருந்து கர்நாடகம் நோக்கி கடந்த 19-ஆம் தேதி சிறப்பு ரயிலில் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். மத்தியப்பிரதேச மாநிலம் பர்ஹான்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் சென்றபோது இருப்பு பாதையில் டெட்டனேட்டர் வெடிபொருள் வெடித்து சிதறியது.
சுதாரித்துக் கொண்ட ரயில் ஓட்டுநர், ரயிலை உடனடியாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், சபீர் என்ற ரயில்வே ஊழியர் இதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.