மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிராக நாடு முழுவதும் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளை எதிர்கொள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.
சாதிவாரி விவரங்கள் திரட்டப்படுவதால் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் எல்லையில்லாதவை என தெரிவித்துள்ள ராமதாஸ், மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஆணையை பிரதமர் மோடி பிறப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.