அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரை கூறி மோசடியில் ஈடுபட்ட அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த கிரஷர் தொழிற்சாலை உரிமையாளர் சரவணன் என்பவருடன் மதுரையைச் சேர்ந்த சங்கரி என்பவர் முகநூல் மூலம் அறிமுகமாகியுள்ளார். அப்போது, அரசியல் பிரமுகர்களிடம் நன்கு பழக்கம் உள்ளதாகவும், குறிப்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அவரது மனைவி தமக்கு மிகவும் நெருக்கமானவர் எனவும் சங்கரி கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் மணல் குவாரி அமைப்பதற்கு செல்லூர் ராஜூ உதவ முன்வர வேண்டுமென எனக்கூறி மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் மாயத்தேவன், சங்கரி, பிருந்தா ஆகியோரிடம் பல தவணையாக 6 கோடியே 80 லட்சம் ரூபாய் வரை சரவணன் பணம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
மேலும், பணம் கேட்டு சரவணனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன் தற்கொலைக்கு முயன்ற நிலையில், மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து சங்கரி, மகா மற்றும் செல்வத்தை கைது செய்தனர். தலைமறைவான கவுன்சிலர் மாயத்தேவன் மற்றும் மாரியை தேடி வருகின்றனர்.