பொம்மை எனக்கூறி கொரியர் மூலமாக ஆந்திராவிலிருந்து மதுரைக்கு கஞ்சாவை நூதன முறையில் கடத்திய பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை பைபாஸ் சாலை பகுதியில் உள்ள தனியார் கொரியர் தலைமை அலுவலகத்திற்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பார்சல் ஒன்று வந்தது. அதில் பொம்மைகள் இருப்பதாக வெளியே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முழு முகவரி இல்லாததால் பார்சலில் இருந்த எண்ணுக்கு கொரியர் ஊழியர்கள் தொடர்பு கொண்டனர்.
அப்போது, இணைப்பு உடனே துண்டிக்கப்பட்டதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பார்சலை தூக்கிப் பார்த்தனர். பொம்மைகள் இருக்கும் பார்சல் கனமாக இருப்பதை உணர்ந்த ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 24 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்திய செல்லூர் அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்த செல்லவீரு, திருக்கம்மாள் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.