வீட்டின் முன் போலீசாரை நிறுத்துவதும் சட்டவிரோத காவல்தான் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சார் பதிவாளரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக வாராகி என்பவரை மயிலாப்பூர் போலீசார் கடந்த 13ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், வாராகியின் மனைவியையும், குழந்தைகளையும் போலீசார் சட்டவிரோத காவலில் வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக கூறி அவரது சகோதரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள், எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா க்ளிடா அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், வாராகி வீட்டின் முன் போலீசார் யாரும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை முடித்துவைத்து உத்தரவிட்டனர். மேலும், வீட்டின் முன் போலீசாரை நிறுத்துவதும் ஒருவகையில் சட்டவிரோத காவல்தான் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.