லட்டு பிரச்னையால் திருப்பதி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை தடைவிதித்துள்ளது.
திருப்பதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்பாராயுடு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், லட்டு கலப்பட விவகாரத்தில் திருப்பதி கோயிலில் வழிபாடு செய்ய துணை முதலமைச்சர் பவன் கல்யாண், முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் திருமலைக்கு வருகை தரவுள்ளதாகவும்,
திருப்பதி மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு காவல்துறை சட்டம் பிரிவு 30-ன் கீழ் அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 24-ம் தேதி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும், காவல்துறையின் அனுமதியின்றி கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை நடத்த கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எஸ்பி சுப்பாராயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.