தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தர மறுத்ததால் வங்கி மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடகரை பகுதியில் உள்ள கனரா வங்கியில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 12 பெண்கள், மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் கேட்டுள்ளனர். ஆனால் பல வங்கிகளில் கடன் பெற்றுள்ளதால், தற்போது கடன் வழங்க முடியாது என வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பெண்களுடன் வங்கிக்கு வந்த நபர்கள், வங்கி ஊழியர்களிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், வங்கி மேலாளரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வங்கி மேலாளர் அளித்த புகாரின்பேரில் 4 நபர்களை கைது செய்த போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து கைதான நபர்களின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.