தஞ்சாவூர் அருகே 24 மணி நேரமும் செயல்படும் தார் கலவை தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்களால் மூச்சு விடுவதற்கே சிரமப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், விளார் ஊராட்சியில் ஜல்லி கலவையோடு தார் கலவை தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நகரின் மையப் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை, ரசாயன வாடை, காற்றில் பரவும் தூசி துகள்களால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் துகள்களால் நோயுடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர்கள், குடியிருப்பு பகுதியில் செயல்படும் தார் கலவை தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், தார் கலவை தொழிற்சாலைக்கு மாசு கட்டுபாட்டு வாரியம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.