லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்கில் முழுமையான போர் சூழல் நிலவுவதால் லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாலஸ்தீனத்தின் காசா நகரைத் தன் ஆளுமையில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி ஏவுகணை தாக்குதல் நடத்தியது .மேலும் 200 இஸ்ரேல் மக்களைப் பிணை கைதிகளாக சிறைப் பிடித்து சென்றனர்.
பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையாக ,ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இதற்கிடையே, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, போர் தந்திரத்தின் புதிய யுக்தியாக ஹிஸ்புல்லாவினர் பயன்படுத்திய பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகளை வெடிக்க செய்து உலகையே அதிர வைத்தது இஸ்ரேல்.
கடந்த 10 நாட்களாக லெபனானில் இஸ்ரேல் வான் வழி தாக்குதல்களை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில், இதுவரை 650 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான லெபனான் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தங்கள் உயிரைக் காப்பாற்ற புலம் பெயர்ந்துள்ளனர்.
1600க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை இஸ்ரேல் தாக்கி தரை மட்டமாக்கியிருக்கிறது . ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர்கள், தளபதிகள் பலர் இந்த தாக்குதலில் பலியாகியுள்ளனர்.
இதற்குப் பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலின் மிகப்பெரிய நகரமான டெல் அவிவ் அருகே உள்ள மொசாட் புலனாய்வு அமைப்பின் தலைமையகத்தைக் குறிவைத்து 200 ராக்கெட்களை ஏவியுள்ளது.
இதனிடையே, இஸ்ரேலின் தலைமை தளபதி மேஜர் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, ராணுவ துருப்புகள் நிறுத்தப்பட்டிருக்கும் வடக்கு பகுதிக்கு சென்றிருக்கிறார்.
இஸ்ரேல் ராணுவ வீரர்களிடம் பேசிய ஹெர்சி ஹலேவி, லெபனானில் தரைவழி தாக்குதல் நடத்துவதற்குத் துருப்புகள் தயாராக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் வான்வழி தாக்குதல்கள் நடத்துவதே, தரைவழியாக எளிதாக செல்வதற்கே என்றும் ராணுவ வீரர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
லெபனான் மீது தரைவழி தாக்குதலுக்காக இஸ்ரேல் ராணுவம், ராணுவத்திலிருந்து விலகியவர்கள் மற்றும் கடந்த சில ஆண்டுகளாக சேவையிலிருந்து விலக்கு பெற்றவர்களையும் மீண்டும் இராணுவத்தில் சேர்த்துள்ளது.
லெபனானைப் பாதுகாக்கும் நியாயமான காரணத்திற்காகவே ஈரான், ஹிஸ்புல்லாவை ஆதரிப்பதாக கூறும் நிலையில், எல்லா சிவப்புக் கோடுகளையும் தாண்டிவிட்ட இஸ்ரேலின் தலைவர்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தரை வழி தாக்குதலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க ஐ.நா பாதுகாப்பு சபையை ஈரான் பிரதமர் Masoud Pezeshkian வலியுறுத்தியுள்ளார்.
இந்த சூழலில், மத்திய கிழக்கில், முழுமையான போருக்கான சாத்தியம் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கும் நிலையில், அதே கருத்தைப் புவிசார் அரசியல் பார்வையாளர்களும் தெரிவித்துள்ளனர்.
முழுமையான போர் தொடங்கினால், அனைவருக்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்று சர்வதேச ராணுவ ஆய்வாளர்கள் கூறினாலும் , ஹிஸ்புல்லாவை அடிபணிய வைக்கும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்தான் தரைவழித் தாக்குதல் அறிவிப்பு என்றும் ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர்.
இதற்கிடையே , இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட அமெரிக்காவும், பிரான்சும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
ஹிஸ்புல்லாவிடம் 2 லட்சம் அளவிலான ராக்கெட்டுக்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளன. இது பல இஸ்ரேல் நகரங்களை அழிக்க வல்லதாகும். மேலும், ஹிஸ்புல்லாவின் தரைப் படையில் 30 ஆயுிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர்.
காஸாவில் நடந்து வரும் தாக்குதல் மற்றும் மேற்கு கரையில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், இஸ்ரேல், லெபனானுக்குள் நுழைவதை, இஸ்ரேலின் நட்பு நாடுகளே விரும்பவில்லை என்றாலும் இஸ்ரேல் தனது நோக்கத்தில் குறியாக இருக்கிறது.