திருப்பதி லட்டு தொடர்பான டெண்டரில் பங்கேற்க ஆந்திர அரசுக்கு எவ்வித உரிமையும் இல்லை என அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 மாதத்துக்கு ஒருமுறை திருப்பதி லட்டுக்கான டெண்டர் விடப்படுவது வழக்கம் என்றும், இதில் ஆந்திர அரசு தலையிடாது எனவும் கூறினார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் தனிச்சிறப்பு வாய்ந்தது என்று கூறிய அவர், அதற்கான உறுப்பினர்களை மத்திய அமைச்சர்களும், பிற மாநில முதலமைச்சர்களும் பரிந்துரைக்கலாம் என்று விளக்கினார்.
தாம் திருப்பதி கோயிலுக்குச் செல்வதை சந்திரபாபு நாயுடு தடுப்பதாக குற்றம்சாட்டிய ஜெகன்மோகன் ரெட்டி, பிற பிரச்னைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பவே லட்டு விவகாரத்தை அவர் கையில் எடுத்ததாக விமர்சித்தார்.
மேலும், நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதை சந்திரபாபு நாயுடுவால் நிரூபிக்க முடியுமா என்றும் ஜெகன்மோகன் ரெட்டி சவால் விடுத்தார்.