பத்மஸ்ரீ விருது பெற்ற 110 வயதான கோவை பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார்.
கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள், வயதான நிலையிலும் இயற்கை விவசாயம் மேற்கொண்டு வந்தார். இயற்கை விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ஆம் ஆண்டு, மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.
அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாப்பம்மாளின் கால்களில் விழுந்து ஆசி பெற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அண்மையில் பாப்பம்மாளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த பாப்பம்மாள் தனது 110வது வயதில் காலமானார். இதனைத் தொடர்ந்து பாப்பம்மாளின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாப்பம்மாளின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பலரும் காலை முதலே அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.