சீனாவின் அணுசக்தியால் இயங்கும் புதிய நீர்மூழ்கிக் கப்பல் வுஹான் துறைமுகத்தில் மூழ்கியதால் ஏற்பட்ட அவமானத்தை பல மாதங்களாக, சீன அரசு மறைத்தது அம்பலமாகியுள்ளது. இந்த உண்மையை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அமெரிக்கா, வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய கடற்படையைக் கொண்டுள்ள நாடாக சீனா விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக சீனா தனது ஆயுதப் படைகளை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சீனக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸையும் தைவானையும் பயமுறுத்தி வருகின்றன.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் சீனா, நூற்றுக்கணக்கான போர் விமானங்களையும் குண்டுவீச்சு விமானங்களையும் தாங்கிய கப்பல்களை இந்திய- பசிபிக் கடல் பிராந்தியத்தில் நிறுத்தியுள்ளது.
ஏற்கெனவே, சீனா கணிசமான எண்ணிக்கையில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது. சீனாவிடம் 130க்கும் மேற்பட்ட பெரிய மேற்பரப்புடன் கூடிய சுமார் 350 கப்பல்கள் மற்றும் பல நீர்மூழ்கிக் கப்பல்கள் இருப்பதாக 2020ம் ஆண்டு அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்தாண்டு, சீனாவுக்கும், கொரியாவுக்கும் இடையே உள்ள மஞ்சள் கடல் பகுதியில் சீன கடற்படைக்கு சொந்தமான பி.எல்.ஏ கடற்படையின் 093-417 என்ற நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில், அந்த கப்பலில் மாலுமியுடன் இருந்த 21 அதிகாரிகள் உட்பட 55 பேர் உயிரிழந்தனர்.
பிரிட்டனின் ரகசிய அறிக்கையில், சீன நீர்மூழ்கிக் கப்பலின் ஆக்ஸிஜன் கருவிகளில் ஏற்பட்ட பேரழிவு காரணமாக சீன நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த கடற்படையினர் இறந்ததாக தெரிவித்தது.
இந்த விபத்தை அதிகாரப்பூர்வமாக மறுத்த சீனா, விபத்துக்குள்ளான நீர்மூழ்கிக் கப்பலைக் காப்பாற்ற சர்வதேச உதவியையும் மறுத்தது. இந்நிலையில், சீனாவின் புதிய அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியது என்றும், சீன கடற்படை இதனை மறைக்க முயன்றது என்றும் இரண்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வுஹான் நகருக்கு அருகிலுள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டுமானத்தின்போது சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மூழ்கியுள்ளது. இந்த Zhou-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒரு தனித்துவமான X- வடிவ ஸ்டெர்னைக் கொண்டுள்ளன, இது நீருக்கடியில் சூழ்ச்சித்திறனை மேம்படுத்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கப்பலாகும்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள், கப்பலில் வேலை செய்து கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. ஆனால் ஜூன் மாதத்தில் இருந்து அதே தளத்தின் படங்கள் தளத்தில் மிதக்கும் கிரேன்களின் பெரிய குழுவைக் காட்டுகின்றன.
எனவே,மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில், இறுதிச் சோதனைகளைச் செய்து கொண்டிருக்கும் போது இந்த சீன நீர் மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மூழ்கும் போது அணு எரிபொருள் எடுத்துச் செல்லப்பட்டதா என்பது பற்றிய தகவல் எதுவும் இல்லை என்றாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன என்று அமெரிக்க ராணுவ வல்லுநர்கள் யூகித்துள்ளனர்.
சீனா, இந்த கப்பலை மறுசீரமைப்பு செய்யலாம் என்றும், அதற்கு பல மாதங்கள் ஆகும் என்றும் கூறியுள்ள அமெரிக்க இராணுவ அதிகாரிகள், சீனாவின் கட்டமைக்கும் திறன் நம்பமுடியாத வேகத்தைக் கொண்டதாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தனது விரைவான விரிவாக்கப் பணிகளால், மேற்கு நாடுகளை அச்சுறுத்தி வரும் சீன ராணுவத்திற்க, முதல் தர அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான Zhou-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியது பெரிய அவமானம் என்பதில் ஐயமில்லை.