விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சாத்தூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு தீபாவளி விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் இருப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஆலையில் திடீரென ஏற்பட்ட விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் ஏற்பட்ட அதிர்வு சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துக் கொண்டு இருப்பதன் காரணமாக தீயணைப்புத் துறையினர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆலையில் தங்கி பணிபுரிந்து வந்த 10-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மீட்பு பணிகளுக்கு பின்னரே உயிரிழப்பு ஏதேனும் பதிவாகியுள்ளதா என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.