உலகளாவிய போர் நிறுத்த அழைப்புகளை நிராகரிப்பதாக கூறியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், நெதன்யாகு, ஹிஸ்புல்லாவை முற்றிலுமாக ஒழிக்கும்வரை இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ நடவடிக்கைகளில் முக்கிய நபரான ட்ரோன் கமாண்டர் முஹம்மது ஹுசைன் ஸ்ரோர் Srour கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் கடந்த வியாழக் கிழமை நடந்த தாக்குதலில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியால் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதியான முஹம்மது ஹுசைன் ஸ்ரெளர், கொல்லப்பட்டதைக் காட்டும் ட்ரோன் காட்சிகளை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில், பல ஹிஸ்புல்லா வளாகங்கள் அமைந்துள்ளன. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு அருகில் வெடிகுண்டுகள் வெடிப்பதும், வெடிப் புகை பெரிதாக எழுவதையும் காண முடிகிறது.
இந்த தாக்குதலில் தான் ஹிஸ்புல்லாவின் முஹம்மது ஹுசைன் ஸ்ரெளர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
1973ஆம் ஆண்டு தெற்கு லெபனானில் உள்ள அய்தா அல்-ஷாப் நகரில் பிறந்த ஸ்ரெளர் Srour, 1996 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா இயக்கத்தில் சேர்ந்தார். ‘ஹஜ் அபு சலே’ என்று அழைக்கப் படும் ஸ்ரௌர் Srour ஹிஸ்புல்லாவின் விமானப் படை பிரிவின் தளபதியானார். இஸ்ரேல் மீதான ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களைத் தலைமையேற்று ஒருங்கிணைத்தார்.
ரத்வான் படையின் “அஜிஸ்” பிரிவுக்கு உத்தரவு தரும் அதிகாரம் மிக்க Srour, யேமனுக்கான ஹிஸ்புல்லாவின் தூதராகவும் செயல்பட்டார். மேலும், ஹூதி தீவிரவாத அமைப்புடன் நெருக்கமாக செயல்பட்டு பல தீவிரவாத செயல்களில் ஸ்ரௌர் செயல்பட்டு வந்தார்.
லெபனானின் கிழக்கு எல்லைகள் மற்றும் சிரியாவில் நடந்த போர்கள் உட்பட ஹிஸ்புல்லாவின் தீவிரவாத ராணுவ நடவடிக்கைகளில் Srour பெரிதும் ஈடுபட்டு வந்தார்.
குறிப்பாக, ஹிஸ்புல்லாவின் ஆளில்லா வான்வழி வாகன (UAV) திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த ஸ்ரௌர், தெற்கு லெபனான் மற்றும் தலைநகர் பெய்ரூட்டில் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு நடுவில் ட்ரோன் உற்பத்தி வசதிகளை ஏற்படுத்தினார்.
ஸ்ரௌர் உட்பட ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் எல்லாம் கொல்லப்பட்ட நிலையில், லெபனானுடனான இஸ்ரேலின் எல்லைப் பகுதியில், இஸ்ரேல் ராணுவம் தரைவழிப் படையெடுப்பு தொடர்பான ஒத்திகை நடத்தியுள்ளது.
இடைவிடாத வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் வெடிப்புகள் ஆகிய தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேலின் அடுத்த கட்டம் தரைவழி தாக்குதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, உலகளாவிய போர் நிறுத்த அழைப்புகளை நிராகரித்துள்ளார். மேலும், ஹிஸ்புல்லாவின் கட்டமைப்பைத் தரைமட்டமாக்கும் வரை இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என்றும் இஸ்ரேலின் கொள்கையை யாரும் தவறாக நினைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
காசாவில் போரிடும் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது எல்லை தாண்டிய தாக்குதல்களை ஹிஸ்புல்லா ஆரம்பித்ததிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆயிரக்கணக்கான இஸ்ரேல் குடிமக்களை மீண்டும் பத்திரமாக வீடு திரும்ப வைப்பதிலும் , இஸ்ரேலின் வடக்குப் பகுதியை பாதுகாப்பதிலும் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.