திருப்பதி லட்டு குறித்து வீடியோ வெளியிட்டு கிண்டல் செய்த விவகாரத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜாவிடம், தங்களது செயலுக்காக யூடியூபர் கோபி, சுதாகர் ஆகியோர் மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி லட்டு விவகாரத்தை கேலியாக விமர்சித்து பிரபல யூடியூப் சேனலான ‘பரிதாபங்கள்’ சேனலில் வீடியோ வெளியிடப்பட்டது. கடும் கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து, அந்த வீடியோ உடனடியாக நீக்கப்பட்டது.
மேலும், அந்த வீடியோவுக்காக சேனல் தரப்பில் மன்னிப்பும் கோரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ‘பரிதாபங்கள்’ யூடியூப் சேனல் மீது தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி ஆந்திர மாநில டிஜிபியிடம் புகார் மனு அளித்தார்.
திருப்பதி லட்டு குறித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், யூடியூபர்கள் கோபி, சுதாகர் ஆகியோர் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜாவிடம் மன்னிப்பு கோரினர். இதனையடுத்து அவர்கள் மீதான புகாரை திரும்ப பெற அமர்பிரசாத் ரெட்டி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.