கொடி காத்த குமரன் என்று போற்றப்படும் திருப்பூர் குமரன் பிறந்த நாள் இன்று. மிக இளம் வயதில், சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, உயிர் நீத்த, திருப்பூர் குமரனின் தேசப் பற்றை நினைவு கூறும் விதமாக ஒரு செய்தி தொகுப்பு.
1904 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் குமரன் பிறந்தார். சராசரி குடும்பத்தில் பிறந்த குமரன், சென்னிமலையில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார்.
குடும்பத்தின் வறுமை காரணமாக படிப்பை நிறுத்திய குமரன், திருப்பூர் வரை சென்று துணிகளை விற்பனை செய்து வந்தார். பிறகு, பள்ளிப்பாளையத்தில் நெசவுத் தொழிலில் இருந்த தனது தாய் மாமனுக்கு உதவியாக வேலை செய்தார். மேலும், தானே சுயமாக தறியும் நெய்து வந்தார்.
நூல் வாங்கி வந்து, தறியடித்து துணி நெய்து வரும் கூலி வருவாய் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. 1922 ஆம் ஆண்டு தனது 12 வது வயதில், வறுமையுடன் போராடி வந்த குமரன், நெசவுத் தொழிலின் அவல நிலைக் கண்டு வருந்தினார். தாள முடியாத வறுமையால் ,குமரனின் குடும்பம் திருப்பூருக்கு இடம் பெயர்ந்தது. திருப்பூரில் பஞ்சுத் தரகு மண்டியில் எடைக் குறிப்பு எழுத்தராக குமரன் பணியில் சேர்ந்தார்.
இந்தச் சூழலிலும், உண்மையும் நேர்மையும் உழைப்பும் நிறைந்த குமரன் தேசப் பக்தியிலும் ஈடுபாடு காட்டி வந்தார். உள்ளூரில் சுதந்திர போராட்ட விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி வந்தார். குமரனின் 19 வது வயதில், பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
1923ஆம் ஆண்டு, 14 வயதுடைய ராமாயி என்பவரை குமரன் திருமணம் செய்து கொண்டார். தனது வாழ்நாளில், 20 முறை தமிழகம் வந்த மகாத்மா காந்தி,அதில் 6 முறை திருப்பூர் நகரத்துக்கு வந்திருக்கிறார். திருப்பூருக்கு காந்தி வந்தபோது, ஒரு சேவா தள தொண்டராக, குல்லாவும் அரைக்கால் ஆடையும் அணிந்து கொண்டு மகாத்மா காந்திக்குப் பாதுகாவலராக குமரன் நின்றார்.அதன் பிறகு குமரன் முழுக்க முழுக்க கதராடை அணிய தொடங்கினார்.
மகாத்மா காந்தியின் கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர் குமரன். இதன் காரணமாக நாட்டின் விடுதலைக்காக மகாத்மா காந்தி அறிவித்த எல்லா போராட்டங்களில் முழு மனதுடன் ஈடுபட்டு வந்தார்.
வட்ட மேஜை மாநாட்டுக்குச் சென்று திரும்பிய பின்னர் , காந்தி அறிவித்த சட்ட மறுப்பு இயக்கம் நாடெங்கும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. காந்தி கைது செய்யப்பட்டார். பொதுக் கூட்டம் நடத்தவும்,மறியல் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியை சட்ட விரோத கட்சி என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. அதன் விளைவாக திருப்பூரிலும் வலுக் கட்டாயமாக, காங்கிரஸ் கட்சி கலைக்கப் பட்டது.
இந்நிலையில், ஆங்கிலேய அரசின் தடையை மீறி திருப்பூரில்,ஊர்வலம் நடத்துவது என திருப்பூர் தேசப் பந்து வாலிபர் சங்கம் முடிவு செய்தது.அதன்படி, பி.எஸ்.சுந்தரம் தலைமையில்,குமரன்,பெங்காலி முதலியார்,ராமன் நாயர்,விஸ்வநாத ஐயர்,நாச்சிமுத்து கவுண்டர்,சுப்பராயன்,நாச்சிமுத்து செட்டியார்,அப்புக்குட்டி மற்றும் நாராயணன் என ஒன்பது பேர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி, இன்றைய திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்தில் 500க்கும் குறைவான மக்களே கலந்து கொண்டனர். ஊர்வலம் திருப்பூர் வடக்கு காவல்நிலையம் அருகில் சென்ற போது, ஆங்கிலேய காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
தடியடியால், குமரனின் மண்டை உடைந்தது…. இரத்தம் கொட்ட குமரன் கீழே விழுந்தார். அடிபட்டு கீழே விழுந்த போதிலும், தனது கையில் அவர் வைத்திருந்த தேசியக் கொடியை மண்ணில் விடாமல் உயர்த்திப் பிடித்தார். மறுநாள், மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்த குமரன் உயிரிழந்தார். அவரது சடலத்தை ஜம்மானை ஆற்றுக் கரையில் புதைத்தனர்.
குமரன் மறைந்து ஒரு மாதத்துக்குள்,திருப்பூருக்கு வந்த மகாத்மா காந்தி, குமரனின் வீடு தேடி சென்று, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.
திருப்பூர் குமரனின்,100 வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், 2004 ஆம் ஆண்டு, இந்திய அரசு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டது. தமிழக அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.
தாய் நாட்டுக்காக, ஆங்கிலேயரின் அடக்குமுறையால் உயிர் துறந்த குமரன், காவலர்களின் தடியடி தலையைப் பிளந்த போதும் தேசியக் கொடியை உயர்த்திப்பிடித்தார். திருப்பூர் குமரனை இன்றும் நாடு கொடி காத்த குமரன் என்று போற்றுகிறது. நெஞ்சை நிமிர்த்தி வீறுநடை போட்ட வரலாற்று நாயகன் திருப்பூர் குமரனின் புகழைப் போற்றுவோம்….