21 ஆண்டுகள் கழித்து சென்னையில் மீண்டும் நடைபெறவிருக்கும் இந்திய விமானப்படையின் வான்வெளி சாகச நிகழ்வுக்கான ஒத்திகை கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த நிலையில் வான்வெளி சாகசங்களில் இடம்பெறவிருக்கும் போர் விமானங்கள் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்…
உலகின் மூன்றாவது சிறந்த வான்படையான இந்திய விமானப் படையின் 92 வது ஆண்டு நிறைவு விழா, வரும் அக்டோபர் 6 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. குறிப்பாக வரும் அக்டோபர் 6 ஆம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில், இந்திய விமானப் படையின் மிக அற்புதமான வான்வெளி சாகச நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுவாகவே டெல்லி, புனே உள்ளிட்ட நகரங்களை மையமாக கொண்டு நடத்தப்படும் இது போன்ற ஆண்டு விழா, சென்னையில் 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடைபெற உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்வு சென்னை மெரினா கடற்கரையில் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
2003 செப்டம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்வுகளை, உலகெங்கிலும் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரில் பார்வையிட்டனர். தற்போது அந்த சாதனையை முறியடிக்க வகையில், இதுவரை இல்லாத அளவில் 15 லட்சத்திற்கு மேற்பட்டோரை பார்வையாளர்களாக வரவழைக்க தேவையான முயற்சிகளில் இந்திய விமானப்படை இறங்கியுள்ளது.
விமானப்படை திட்டமிட்டபடி அதிகளவிலான பார்வையாளர்கள் வரும் பட்சத்தில் உலகிலேயே அதிக பார்வையாளர்கள் பங்கேற்ற விமான சாகச நிகழ்ச்சியாக லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் மெரினா இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்திய விமானப் படையின் மெய் சிலிர்க்க வைக்கும் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உலகிலேயே ஒரே இராணுவ ஹெலிகாப்டர் சாகச குழுவான சாரங் ஹெலிகாப்டர் குழு மெரினாவின் வானத்தை வண்ணமயமாக்க இருக்கிறது .
அதே போல தமிழர் கார்த்திகேயன் கமாண்டில் செயல்படும் தேஜஸ் விமானம், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரபேல் விமானம், உயரப் பறந்து சாகசம் நிகழ்த்தும் சுகாய் 30, மூவர்ணத்தை பிரதிபலிக்கும் சூர்யகிரன் குழுவின் வித்தியாசமான சாகச நிகழ்வு, என புகழ்பெற்ற இந்திய விமானிகள் கூடி பொதுமக்கள் முன்னிலையில் சாகசங்களை நிகழ்த்த உள்ளனர்.
மேலும் இந்தியாவின் பாரம்பரிய விமானமான ஹார்ட்வோர்டு விமானம், பழமை வாய்ந்த டகோட்டா விமானம் ஆகியவை இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை அலங்கரிக்க உள்ளன. மேலும் மீட்புப் படை விமானங்களில் அதிக உயரத்தில் பாராசூட்டில் இருந்து குதித்து தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள நம் நாட்டு பிணைய கைதிகளை மீட்பது உள்ளிட்ட பல்வேறு வீர தீர சாகச நிகழ்வுகளும் நிகழ்த்திக் காட்டப்பட உள்ளன.
விமான சாகசங்களை கிழக்கு கடற்கரை சாலை கோவளத்தில் இருந்து, சென்னை ஐ என் எஸ் அடையாறு வரையிலான இடைப்பட்ட கடற்பரப்பில் இருந்தும், ஆங்காங்கே உள்ள உயர் கட்டிடங்கள் மீது இருந்தும் பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். குறிப்பாக இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியை நேரில் வந்து கண்டுகளிக்க பொதுமக்கள் அனைவருக்கும் மெரினா கடற்கரை மணல்பரப்பில் இலவச அனுமதி வழங்கியுள்ளது இந்திய விமானப் படை.
இந்த பிரமாண்ட நிகழ்ச்சியை கான இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப் படையின் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஏர் chief மார்ஷல் அமர் பிரீத் சிங் மற்றும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் சேவையானது முற்றிலுமாக இந்திய விமானப் படையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை கடைகள் அகற்றப்பட்டு, முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. சிக்னல்களை ஒருங்கிணைக்கும் ரூட்டர்கள், விமானிகளுக்கு கமாண்ட் கொடுக்கும் உயர் கோபுரம், தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுக்கும் தொழில்நுட்ப பாதுகாப்பு கருவிகள் மற்றும் நிகழ்ச்சியை வர்ணனை செய்பவர்களுக்கான பிரத்யேக அறை என அனைத்தும் ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
21 ஆண்டுகள் கழித்து சென்னையில் வான்வெளி சாகச நிகழ்வு நடைபெறுவதால், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பல்வேறு தரப்பினர் சென்னை மெரினா கடற்கரையில் தங்கள் கால்தடங்களை பதிக்க உள்ளனர்.
இதில் கூடுதல் சிறப்பாக இந்திய விமானப் படை சாகச குழுவில் Mi-17 V5 ரக விமானத்தை விங் கமாண்டர் ஷாலிஷா தாமி மற்றும் ஸ்குவார்டன் லீடர் மின்டி அகர்வால், MIG 21 bison ரக விமானத்தை முதல் இந்திய பெண் விமானியான flight லெப்டினன் அவனி சதுர்வேதி, மற்றும் சக்சேனா என பெண்கள் பலரும் இந்த சாகசத்தில் ஈடுபட உள்ளனர். நாரி சக்திக்கு வழிவகை செய்யும் இவர்களின் பங்களிப்பும், மிக பிரமாண்டமான வான்வெளி சாகச நிகழ்வுகளும் ஒருங்கிணைந்து அரங்கேறவிருக்கும் இந்த நிகழ்வு இந்திய விமானப்படையின் மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.