ஹிஜாவு நிதி நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் தாக்கல் செய்த ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
15 சதவீதம் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் 4 ஆயிரத்து 620 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஹிஜாவு நிதி நிறுவனத்தை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், தங்களுக்கு ஜாமின் வழங்கக்கோரி முக்கிய நிர்வாகிகள் 4 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்ற தயாராக இருப்பதாகவும், அதனால் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கில் இன்னும் பலர் தலைமறைவாக உள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார். தொடர்ந்து காவல்துறை தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.