ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துளளார்.
பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து இஸ்ரேல் ராணுவம் – ஹமாஸ் இடையே ஓராண்டாக போர் நீடித்து வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, லெபனானில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக கடந்த 27-ம் தேதி விமானப்படை தாக்குதலையும், பின்னர் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்ததால் கோபமடைந்த அண்டை நாடான ஈரான், இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதல் போராக மாறக்கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்திருக்கிறார். இதனை மறுத்துள்ள அதிபர் வேட்பாளர் டிரம்ப், பைடன் தவறான புரிதலுடன் இருக்கிறார் என கூறியுள்ளார். முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தட்டும் எனவும், பின்னர் மற்றதைப் பற்றி கவலைப்படலாம் என்றும் டிரம்ப் விபரீத யோசனை கூறியுள்ளார்.