சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை லட்சக்கணக்கானோர் கண்டு களித்தனர்.
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறைவையொட்டி, சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற போர் விமானங்கள் தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் சேரா, சோழா, பாண்டியா, பல்லவா என்ற பெயர்களில் பல்வேறு அணிவகுப்புகளை நடத்தின. குறிப்பாக நாட்டின் பெருமையாக கருதப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகுரக தேஜஸ் விமானம் பாண்டியா அணிவகுப்பு நடத்தியது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
முன்னதாக சி-295 ரக விமானம், டார்னியர் 228 ரக விமானம், ஐஎஸ்-78, மிராஜ் – 2000, கார்கில் போரில் பங்கேற்ற ஜாக்குவார் ரக விமானங்கள் நடத்திய அணிவகுப்புகள் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.
தொடர்ந்து காற்றை கிழித்தபடி பறந்த SU-30 (MKI) ரக போர் விமானங்கள் வானில் சுழன்று சுழன்று வட்டமிட்டபடியும், குட்டிக்கரணம் அடித்தும் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி பிரமிப்பை ஏற்படுத்தின.