வான் சாகச நிகழ்வை காண வந்த பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட முறையாக செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரைக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என்பது தெரிந்தும் முறையான போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி மிக குறைந்த எண்ணிக்கையில்தான் ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், வேளச்சேரி – சிந்தாதிரிப்பேட்டை, தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான ரயில்களில் கூட்டம் அலைமோதியது.
ரயில்களில் இடம் கிடைக்காததால், படிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணிக்க வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டது. நேற்று மட்டும் புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
மறுபுறம், பேருந்துகளும் அதிகளவில் இயக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. போக்குவரத்தை சரி செய்யவும் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதனால், வாலாஜா சாலை, அண்ணா சாலை, ராயப்பேட்டை, சேப்பக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனைத்து இடங்களிலும் வாகனங்கள் ஆமை வேகத்தில் நகரும் நிலை ஏற்பட்டது.
அதேபோல், வாகனங்களை நிறுத்தவும் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என வாகனஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளும் போதிய அளவில் செய்து தரப்படவில்லை.
இதனால், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். நிகழ்ச்சி முடிந்தவுடன் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது.