திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ நிகழ்வை முன்னிட்டு முத்துப்பந்தல் வாகனத்தில் வீதியுலா வந்த மலையப்ப சுவாமியை பக்தர்கள் கோவிந்தா கோஷமிட்டு வழிபட்டனர்.
திருப்பதி ஏழுமலையான கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் இரு நாட்களில் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்னம் மற்றும் சிம்ம வாகனங்களில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில், 3-வது நாளான நேற்றிரவு பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கிடையே, மலையப்ப சுவாமி அன்னையர்களுடன் முத்துப் பந்தல் வாகனத்தில் 4 மாட வீதிகளிலும் வலம் வந்தார்.
வீதியுலாவில் யானை, குதிரைகள் மற்றும் காளைகள் அணிவகுத்து வர பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் தச அவதாரங்களை குறிக்கும் விதமாக பல்வேறு வேடமணிந்தும், தப்பாட்டம், கோலாட்டம் மற்றும் லம்பாடி நடனமாடியும் வீதியுலாவில் பங்கேற்றனர்.