வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோயில் ரோப் கார் சேவை இன்று முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில் மற்றும் ரோப் கார் சேவை இயக்கப்படுகிறது. இதில் ரோப் கார் சேவையானது, பராமரிப்பு பணிகளுக்காக மாதத்தில் ஒரு நாளும், வருடத்தில் ஒரு மாதமும் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை இன்று முதல் அடுத்த 40 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்தபின், மீண்டும் சேவை தொடங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.