வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் தொடக்கம் முதலே தடுமாற தொடங்கினர். இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாத அந்த அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணியின் கேப்டன் ஷான்டோ அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணியை சோ்ந்த அர்ஷ்தீப், வருண் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 11.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது. இதன்மூலம் முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.