நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவைகள் இந்த ஆண்டு தீபாவளிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவைகள் இன்னும் தாமதம் ஆகலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த தாமதத்துக்கு என்ன காரணம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2022ம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் உள்ள BSNL நிறுவனம், தனது 4G சேவைகள் வழங்கும் திட்டத்துக்கு, உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டது. மத்திய அரசின் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை BSNL நிறுவனம் பயன்படுத்த முடிவு செய்தது.
தொலை தொடர்பு துறையில், 5ஜி சேவைகள் வந்துவிட்ட நிலையிலும், அரசின் பொது துறை நிறுவனமான BSNL 3ஜி சேவைகளை மட்டுமே வழங்குகிறது. BSNL சேவையை மேம்படுத்தும் வகையில், 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தொலைதொடர்பு திட்டங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களுக்கு சுமார் 1.28 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில், கணிசமான தொகை BSNL நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்தது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், தேஜாஸ் நெட்வொர்க்குகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான C-DOT ஆகியவற்றுக்கு மேம்படுத்தக்கூடிய 4ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதற்காக 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை பிஎஸ்என்எல் வழங்கியிருந்தது .
BSNL-ன் தற்போதைய கிளவுட் அடிப்படையிலான கட்டமைப்பு, அதன் 4G நெட்வொர்க்கை இயக்குகிறது. இதுவே 5G சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று BSNL தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியா முழுவதும் ஒரு லட்சம் டவர்களை அமைக்கும் திட்டத்தில் இதுவரை 1000 டவர்கள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. 4G சேவை வழங்கும் BSNL மூலதனச் செலவினங்களில் உள்ள பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக, மேலும் 6000 கோடி ரூபாய்க்கும் மேல் BSNL க்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் 100,000 டவர்கள் 2025ம் ஆண்டின் பிற்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள், தங்கள் கட்டணத் திட்டங்களை சராசரியாக 15 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை உயர்த்தினர். இதனால்,15 நாட்களுக்குள், சுமார் 2, 50,000 வாடிக்கையாளர்கள் BSNL க்கு மாறினர். எதிர்ப்பாராத இந்த மாற்றத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி (BNSL 4G) சேவைகளை வேகமாக விரிவுபடுத்த தொடங்கியது.
2100 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் உள்ள 3ஜி சேவைகளை 4ஜிக்கு மேம்படுத்துவதையும், மேம்படுத்தப்பட்ட கவரேஜ் மற்றும் திறனுக்காக 700 மெகா ஹெர்ட்ஸ் பயன்படுத்துவதையும் BSNL நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
BSNL நிறுவனத்தின், நிகர இழப்பு, 8,161 கோடி ரூபாயிலிருந்து 5,367 கோடி ரூபாயாக குறைந்துள்ளது என்றாலும், நிறுவனம் மோசமான நிதிநிலையில் தான் உள்ளது.
இந்நிலையில், சுய-சார்பு இந்தியா திட்டமும் BSNL வளர்ச்சிக்கு தடையாக உள்ளதோ என்று ஐயத்தையும் ஏற்படுத்துகிறது.
சர்வதேச விற்பனையாளர்களிடமிருந்து 4G அல்லது 5G உபகரணங்களைப் BSNL பயன்படுத்துவதை சுய சார்பு இந்தியா திட்டம் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. ஒருவேளை வெளிநாட்டு உபகரணங்களை BSNL பயன்படுத்தி இருந்தால், BSNL 5 ஜி சேவையை வழங்கி இருக்கும் என்கிறார்கள்.
புதிய உள்நாட்டு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அதன் பரிசோதனை மற்றும் தர வரிசைப்படுத்தல் ஆகியவை நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகின்றன. BSNL-ன் 4G மற்றும் 5G வெளியீட்டை மேலும் தாமதப்படுத்தியுள்ளது. இதனால், BSNL 4ஜி சேவை, அடுத்த ஜூன் மாதம் தான் தொடங்கும் என்று தெரிய வருகிறது.